"வரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்

ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

Update: 2020-12-21 04:04 GMT
புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 

இந்தியாவில் ஜனவரியில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். ராணவ வீரர்கள், முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்பட 30 கோடி பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம் தான் எங்களுக்கு முக்கியம்.

முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை வழங்கப்படும். அதில் எவ்வித சமரசமும் காட்டப்படாது என்றும் ஹர்சவர்தன் தெரிவித்து உள்ளார். 

இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சில மாதங்களுக்கு முன்பு, சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 97 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது நம்பிக்கை அளிக்கிறது. உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் அதிகமாக உள்ளது .

மேலும் இந்தியாவில் கோவிட் -19 மோசமான காலம் முடிந்துவிட்டது, ஆனால் முன்னெச்சரிக்கைகள் இன்னும் நமக்கு தேவைப்படுகிறது. முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.  கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்