நாட்டிலேயே இளம் பெண் மேயராக தேர்வான ஆர்யாவுக்கு நடிகர் மோகன்லால் பாராட்டு

நடிகர் மோகன்லால் நாட்டிலேயே இளம் பெண் மேயராக தேர்வான ஆர்யா ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.

Update: 2020-12-26 10:50 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்யா ராஜேந்திரன் (வயது 21).  இவர், திருவனந்தபுரத்தில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.  கல்லூரி மாணவியான ஆர்யா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள பாலசங்கம் என்ற குழந்தைகள் அணி தலைவர் பதவியையும் அவர் வகித்து வருகிறார்.  இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் நடந்த கூட்டமொன்றில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆர்யாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்வு செய்தது.

இதனால் கேரளாவில் 21 வயதில் மேயர் பதவிக்கு தேர்வான இளம்பெண் என்ற பெருமையை ஆர்யா பெற்றுள்ளார்.  அவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், முதன்மை பள்ளிகளின் தரம் உயர்த்துவது மற்றும் மேம்படுத்துவது உள்ளிட்ட பணியிலும் மற்றும் பிற வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்துவேன் என்று கூறினார்.

அரசியல் பணிகளுக்கு இடையே தனது கல்லூரி படிப்பையும் முடித்து விடுவேன் என்று அவர் நம்பிக்கையும் தெரிவித்து உள்ளார்.  இந்த நிலையில், நாட்டின் இளம் பெண் மேயராக தேர்வான ஆர்யா ராஜேந்திரனை மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் தொலைபேசி வழியே இன்று தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதற்கு நன்றி தெரிவித்து கொண்ட ஆர்யா, நான் சிறந்த முறையில் பணியாற்றுவேன்.  அதற்கான நம்பிக்கை எனக்கு உள்ளது என மோகன்லாலிடம் கூறியுள்ளார்.

நடிகர் மோகன்லால், ஆர்யா தேர்வான முடவன்முகல் வார்டு பகுதியை சேர்ந்தவர்.  அந்த வார்டில் மோகன்லாலுக்கு ஓட்டுரிமையும் உள்ளது.  இதுதவிர இருவரும் அருகருகே வசிப்பவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்