மேற்கு வங்காள கவர்னருடன் கங்குலி சந்திப்பு; அரசியலில் ஈடுபட திட்டமா?

சவுரவ் கங்குலி கவர்னர் மாளிகைக்கு சென்று மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

Update: 2020-12-27 17:58 GMT
Photo Credit: (@jdhankhar1/Twitter )
கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். அங்கு அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல்–மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கங்குலி அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் சவுரவ் கங்குலி கவர்னர் மாளிகைக்கு சென்று மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் வெளியே வந்த கங்குலி, செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

இதைப்போல இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு வி‌ஷயங்களை பேசியதாக கவர்னர் தாங்கர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார். மேலும் நாட்டின் பழமையான கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனுக்கு வருமாறு கங்குலி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் அதில் தெரிவித்து இருந்தார். மேற்கு வங்காள கவர்னருடனான கங்குலியின் சந்திப்பு அவரது அரசியல் வருகைக்கான ஆயத்தமா? என்ற எதிர்பார்ப்பு மாநிலத்தில் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்