மராட்டியம் அரசு மருத்துவமனை திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு; விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவு

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-01-09 03:42 GMT
பண்டாரா,

மராட்டிய மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனை அமைந்து உள்ளது.  இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் அந்த பிரிவில் இருந்த 10 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.  இதுபற்றி அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறும்பொழுது, அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு உள்ளோம்.  அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இதனை அறிந்த குழந்தைகளின் உறவினர்களும் மருத்துவமனைக்கு அலறியடித்தபடி விரைந்து சென்றுள்ளனர்.  தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.  போலீசாரும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உடனடியாக சுகாதார மந்திரி ராஜேஷ் தோப், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு தீ விபத்து பற்றி விவரம் கேட்டறிந்து உள்ளார்.  இந்த தீ விபத்து பற்றி விசாரணை மேற்கொள்ளும்படியும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்