வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை

வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் என்று தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-12 07:46 GMT
புதுடெல்லி,

தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். 

அதில் பேசிய அவர், “ தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடந்த இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. இதன் மூலம், நமது அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டது. புதிய தேசத்தை கட்டமைக்கும் ஒரு முயற்சியாக புதிய கல்விக்கொள்கை உள்ளது. 

முன்பு அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கெட்டுப்போவதாக குடும்பங்கள் நினைத்தன. ஆனால் இன்று, நாட்டு மக்கள் நேர்மையான அரசியல்வாதிகளை ஆதரிக்கின்றனர், நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் சூழலை நாங்கள் வழங்கி உள்ளோம். ஒவ்வொரு துறையையும் போலவே அரசியல், இளைஞர்களுக்கும் தேவை நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் ஒரு வாய்ப்பாக உள்ளது. நாட்டிற்கு சவாலாக இருக்கும் வாரிசு அரசியலானது, ஜனநாயகத்திற்கு ஆபத்தாக உள்ளது. அதனை முற்றிலும் வேரறுக்க வேண்டும். 

வாரிசு அரசியல்வாதிகளுக்கு, தேசம் என்றும் முதன்மையாக இருந்தது இல்லை. ஆனால், வாரிசு அரசியல் என்ற நோய் இன்னும் முற்றிலும் அழியவில்லை. வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினரே முக்கியம். தங்கள் குடும்ப பெயரின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. திறமைக்கும், நேர்மைக்கும் தற்போது மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். 

2047-ம் ஆண்டில் சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நோக்கி நாம் செல்லும்போது அடுத்த 25-26 ஆண்டுகள் மிக முக்கியமானவை. இது உங்கள் வாழ்க்கையின் பொற்காலம், நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்