ஒடிசாவில் கூலிப்படை அமைத்து மகளை கொலை செய்த தாய் கைது

ஒடிசாவில் கூலிப்படை அமைத்து மகளை கொலை செய்த வழக்கில் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-01-18 01:53 GMT
பாலசோர்,

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுகுரி கிரி (வயது 58).  இவரது மகள் ஷிபானி நாயக் (வயது 36).  கடந்த 12ந்தேதி நாக்ராம் கிராமத்தில் பாலம் ஒன்றின் கீழ் இருந்து ஷிபானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரை கற்களால் அடித்தும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.  இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.  தனது மகளை கொலை செய்ய கிரி கூலிப்படை அமைத்து இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஷிபானி சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இது கிரிக்கு பிடிக்கவில்லை.  இந்த தொழிலை விட்டு விட்டு வரும்படி மகளிடம் கிரி கூறியுள்ளார்.  ஆனால் அதில் பலனில்லை.  இதனால், ஆத்திரத்தில் தனது மகளை கொலை செய்ய கிரி முடிவு செய்துள்ளார்.

இதற்காக பிரமோத் ஜெனா (வயது 32) என்பவரை தொடர்பு கொண்டு ஷிபானியை கொலை செய்ய கூலி கொடுத்துள்ளார்.  இதற்காக ரூ.50 ஆயிரம் தருவது என முடிவானது.  ஜெனாவிடம் அட்வான்சாக கிரி ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

போலீசார் ஜெனாவையும் மற்றும் அவரது கூட்டாளி 2 பேரையும் கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.  ஒடிசாவில் தனது மகளை தாய் ஒருவர் கூலிப்படை அமைத்து கொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்