அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்ட ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Update: 2021-01-21 02:43 GMT
புதுடெல்லி,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்டார்.

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளார் என வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறினார்.

ஜென் சகி கூறும்பொழுது, குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை நீக்குதல், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், மக்களுக்கு பொருளாதார உதவி, ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்ப பெறுதல் போன்றவை அந்த உத்தரவுகளில் உள்ளன.

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா டிரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது.  நிதியுதவியையும் நிறுத்தியது. அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதார கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும்.

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. அந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். புதிய வேலைவாய்புகள், பருவநிலை மாற்ற சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை எடுக்கப்படும்.

கறுப்பினத்தவர்கள், லாட்னோ, பூர்வீக அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோர் அனைவரையும் சமமாக நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என ஜென் சகி  கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற பின்னர் அதிபரின் அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் தனது பணியை தொடங்கினார்.  அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

அவற்றில், பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்து உள்ளார்.  இதன்படி, பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது.

இதேபோன்று, அமெரிக்காவில் இன சமத்துவத்தை உறுதி செய்யும் வகையிலான உத்தரவை பைடன் பிறப்பித்துள்ளார்.  அமெரிக்காவின் சர்வதேச கூட்டணிகளை சரிசெய்வோம் என்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளங்களுக்கான நல்ல நண்பனாக அமெரிக்கா விளங்கும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இவற்றை கவனத்தில் கொண்டு, அமெரிக்க அரசு அலுவலகங்களில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது ஆகியவை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்று உள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு பகிரப்பட்ட மதிப்புகளை அடிப்படையாக கொண்டது.  இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஜோ பைடனுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

ஜோ பைடனுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் ஜஸ்டின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகோ உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா உடனான உறவு வலுப்பெறும் எனவும் அமெரிக்க மக்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க நாள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்