லாலு பிரசாத் உடல் நிலை மோசம்; விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்சுக்கு மாற்றப்பட்டார்

லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-01-23 19:45 GMT
ராஞ்சி, 

கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜெயில் தண்டனை பெற்றுள்ள ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 72 வயதாகும் லாலு பிரசாத்துக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவருக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.

லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, 8 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு அவரது உடல்நிலையை பரிசோதித்தது. பின்னர் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற இந்த குழு பரிந்துரைத்தது.

இதைத்தொடர்ந்து நேற்று பலத்த பாதுகாப்புடன் அவர் ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு லாலு பிரசாத் யாதவ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக லாலு பிரசாத்தை அவரது குடும்பத்தினர் ராஞ்சி மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகன் தேஜஸ்வி, லாலு பிரசாத் அபாயகட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனையும் சந்தித்த தேஜஸ்வி, தங்கள் தந்தையை டெல்லிக்கு இடம்மாற்றுவதற்கு மாநில அரசின் உதவியை வேண்டினார். இதற்கிடையில், லாலு பிரசாத் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ஜெயில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக மாநில அரசு, ஜெயில் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஜார்கண்ட் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்