பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.

Update: 2021-01-29 21:45 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தொடரின் அலுவல்கள் குறித்து விவாதிப்பதுடன், தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினையை எழுப்ப கட்சியினர் அனுமதி கேட்பார்கள் என தெரிகிறது.

பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும். ஆனால் இந்த முறை தொடர் தொடங்கிய பின்னரே கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, 2 நாட்களுக்கு முன்னரே முடிக்கப்படும் என தெரிகிறது. அதாவது பிப்ரவரி 15-ந் தேதிக்கு பதிலாக 13-ந் தேதியே முடிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் இதை வலியுறுத்தியதால், அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

2 நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டாலும், தொடரின் அலுவல் நாட்களில் பாதிப்பு இருக்காது எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்