ஹெல்மெட் அணிவது குறித்து நவீன முறையில் விழிப்புணர்வு: கவர்னர் கிரண்பெடி

ஹெல்மெட் அணிவது குறித்து நவீன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-08 21:55 GMT
கவர்னர் கிரண்பெடி
கவர்னர் ஆலோசனை
புதுவை கல்வித்துறை அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி நேற்று ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கல்வித்துறை செயலாளர், அதிகாரிகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை பயிற்சியாளருடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வி‌‌ஷயங்கள் குறித்து பேசப்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது. அந்த வி‌‌ஷயங்களில் ஓரிரு நாட்களில் நடைமுறைக்கு வரும் போது தெரியவரும். புதுவையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக போக்குவரத்து போலீசார் நவீன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஓட்டுனர் உரிமம் ரத்து
புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை செயலாளர் அசோக்குமார் போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, திருத்தம் கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் இணையதள தரவுகளை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஓட்டுனர் உரிமம் குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பான தகவல்களையும் இணைய தளத்தில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்