உத்தரகாண்ட் திடீர் வெள்ளத்துக்கான காரணம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கான காரணம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

Update: 2021-02-09 08:37 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் அலெக்நந்தா மற்றும் தவுலிகங்கா ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 2 நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது அங்கு பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 197 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அங்குள்ள நீர்மின்நிலையத்தில் அமைந்திருகும் சுரங்கப்பாதையில் ஊழியர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த பகுதியையொட்டி 13 கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பனிப்பாறை வெடிப்பால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பனிப்பாறைக்கு கீழே தண்ணீர் சரியாக உறையாமல் ஏரி உருவாகி இருக்கலாம் என்றும் இதன் காரணமாக பிடிமானம் இல்லாமல் பாறை உடைந்து விழுந்து இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து இஸ்ரோவின் தொலை உணர்வு ஆராய்ச்சி அமைப்பு (IISR) விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்கள் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

எனவே அந்த இடத்தில் ஏரி அமைந்திருந்து அதன் மூலமாக பாறை வெடித்து விழவில்லை. பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். பனிச்சரிவு ஏற்பட்ட இடம் கடல் மட்டத்திற்கு மேல் 5,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 14 கி.மீ சுற்றளவுக்கு பனிச்சரிவு ஒரே நேரத்தில் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 3 கோடி கியூபிக் மீட்டர் தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேறி இருக்கிறது. இதனால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டுவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்