ஜனாதிபதியுடன் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்திப்பு; கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வலியுறுத்தல்

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வலியுறுத்தினார்கள்.

Update: 2021-02-11 10:24 GMT
கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி புகார்
கிரண்பெடி
புதுவை கவர்னர் கிரண்பெடி அன்றாட அரசு நடவடிக்கையில் தலையிடுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி வருகிறார். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற கவர்னர் கிரண்பெடி தடையாக இருப்பதாகவும் அவரை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. வருகிற 16-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக புகார் செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் டெல்லி சென்றனர். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று அவர்கள் சந்தித்து பேசினார்கள்.

அப்போது கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கை குறித்து புகார் தெரிவித்தனர். மேலும் புகார் மனுவையும் அளித்தனர்.

அந்த மனுவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பதாவது:-

சட்ட விதிமுறைகளை மீறி புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் கிரண்பெடி தலையிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சகம் எங்களுக்கு வழங்கிய நிதி அதிகாரத்தையும் அவர் தர மறுக்கிறார்.

நிபந்தனைகள்
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்குவதற்கான கோப்பினையும் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

மக்கள் நல திட்டங்களில் இவர் போடும் நிபந்தனைகளால் ஏழை மக்கள் பலனடைய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. கொரோனா காலத்தில் அவர் கவர்னர் மாளிகையைவிட்டு வெளியே வரவில்லை. கொரோனா ஆஸ்பத்திரிகளை பார்வையிட்டு மருத்துவ பணியாளர்களை பாராட்டவில்லை. ஆனால் மருத்துவ அதிகாரிகளை தூக்கிலிடுவேன் என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே மிரட்டினார்.

துக்ளக் தர்பார்
பாதுகாப்பு என்ற பெயரில் துணை ராணுவப்படையை அழைத்து கவர்னர் மாளிகையை சுற்றி தடுப்புகள் அமைத்து நிறுத்தி வைத்துள்ளார். சட்ட விதிகளை மதிக்காமல் அவர் துக்ளக் தர்பார் நடத்தி வருகிறார்.

நிர்வாக வி‌‌ஷயங்கள், நிதி விவகாரங்கள், கொள்கை முடிவுகளில் தேவையில்லாமல் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படுகிறார். அவர் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக உள்ளார். ஜனநாயக படுகொலை இங்கு நடக்கிறது. இந்த வி‌‌ஷயத்தில் நீங்கள் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் கவர்னர் பொறுப்பில் இருந்து கிரண்பெடியை நீக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்