மிஸ் இந்தியா 2020ன் ரன்னர்-அப் பட்டம் வென்ற ரிக்சா ஓட்டுனரின் மகள்

ரிக்சா ஓட்டுனரின் மகளான மான்யா சிங் என்பவர் மிஸ் இந்தியா 2020ன் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார்.

Update: 2021-02-11 23:27 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் குஷிநகரை சேர்ந்த இளம்பெண் மான்யா சிங்.  பெமினா மிஸ் கிராண்ட் இந்தியா 2020ம் ஆண்டுக்கான அழகி போட்டியில் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார்.

ரிக்சா ஓட்டுனரின் மகளான இவர் கடந்த கால தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.  அவர் உணவு, தூக்கம் இல்லாமல் பல இரவுகளை கழித்துள்ளார்.  சில ரூபாய் பணம் சேமிப்புக்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார்.  அவர் விரும்பிய புத்தகங்கள் மற்றும் உடைகள் அவருக்கு கிடைக்கவில்லை.

அவருடைய பெற்றோர் சிறிய நகையையும் மகளின் கல்வி கட்டணத்திற்காக அடகு வைத்துள்ளனர்.  கல்வி வலிமையான ஆயுதம் என்று நம்புகிறேன்.  அனைத்து நேரங்களிலும் அது அவர்களுடன் இருக்கும் என மான்யா சிங் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய மேனிலை பள்ளி படிப்பில் சிறந்த மாணவிக்கான விருது வென்றுள்ளார்.  பள்ளி கட்டணம் செலுத்தவோ, புத்தகங்களை பெறவோ கூட வசதியில்லாமல் வாழ்க்கையில் கடுமையாக போராடியுள்ளார்.

அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், பகலில் படித்து, மாலையில் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, இரவில் கால் சென்டரில் வேலை செய்துள்ளேன் என தெரிவித்து உள்ளார்.  பல இடங்களுக்கு செல்வதற்கு மணிக்கணக்கில் நடந்து சென்றேன்.  அதனால், ரிக்சாவுக்கு கொடுக்கும் கட்டண தொகையை சேமித்தேன் என அவர் பதிவிட்டு உள்ளார்.

நீங்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டால், உங்களுக்கு அனைத்தும் சாத்தியப்படும் என உலகிற்கு காட்டவே நான் பெமினா மிஸ் இந்தியா 2020 போட்டியில் கலந்து கொண்டு இங்கு நிற்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்