திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ரத சப்தமி விழா நடக்கிறது. அதையொட்டி 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Update: 2021-02-17 23:51 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. அன்று 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆகையால், இவ்விழாவை ‘மினி பிரம்மோற்சவம்’ என்றும் அழைக்கலாம்.

நாளை அதிகாலை 5.30 மணியளவில் முதல் வாகனமாக சூரிய பிரபை வாகனம் நடக்கிறது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார். கோவில் எதிரே உற்சவரை சூரிய பிரபை வாகனத்துடன் நிலை நிறுத்தி, சூரியன் உதயமாகி வரும் நேரத்தில் சூரிய ஜெயந்தி விழா நடத்தப்படுகிறது. சூரிய பிரபை வாகனத்தில் சூரிய நாராயணராக எழுந்தருளும் மலையப்பசாமிக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6.30 மணிக்கு சூரிய பிரபை வாகன ஊர்வலம் தொடங்குகிறது.

இதையடுத்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன ஊர்வலம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகன ஊர்வலம், மதியம் 1 மணியில் இருந்து 2 மணிவரை அனுமந்த வாகன ஊர்வலம், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை சக்கர ஸ்நானம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை கல்ப விருட்ச வாகன ஊர்வலம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சர்வ பூபால வாகன ஊர்வலம், இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன ஊர்வலம் நடக்கிறது. இத்துடன் வாகன ஊர்வலம் நிறைவடைந்தது.

ரத சப்தமி விழாவால் ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்