அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: அவரைக் கொல்ல சதித்திட்டம் மம்தா பான்ர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்க ரெயில் நிலையத்தில் அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சதித்திட்டம் நிறைந்தது என மம்தா பான்ர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2021-02-18 11:19 GMT
படம்: ANI
முர்ஷிதாபாத்,

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் தொழிலாளர் துறை மந்திரியாக ஜாகிர் உசேன் இருந்து வருகிறார்.  அவர் கொல்கத்தா நகருக்கு செல்வதற்காக நிம்திதா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், சில மர்ம நபர்கள் திடீரென அவர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.  இதில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார்.  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதில் அவரது கால் மற்றும் கைகள் பலத்த காயம் அடைந்து உள்ளது.

இந்த தாக்குதலுக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் மற்றும் மேற்கு வங்காளத்திற்கான மத்திய கண்காணிப்பாளரான கைலாஷ் விஜய்வர்க்கியா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேற்கு வங்காள சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.  கொல்கத்தாவில் உசேன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று அவருக்கு ஆறுதல் வழங்கினார்.  உடன் இருந்த மருத்துவர்களிடம் உசேனுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து உள்ளார்.

 பின்னர்  நிருபர்களிடம் பேசிய  மம்தா பான்ர்ஜி அமைச்சர் மீதான இந்த தாக்குதல் சதித்திட்டம் நிறைந்தது. தாக்குதல் நடைபெற்றபோது ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. விளக்குகள் கூட எரியவில்லை. அசம்பாவிதம் நடைபெற்ற இடம் ரெயில்வேக்கு சொந்தமானது. இதில் முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். மேலும், ரெயில்வேத்துறை மத்திய அமைச்சரகத்தின் கீழ் செயல்படுகிறது.

 ஜாகிர் உசேன் பிரபலமான தலைவர் என்பதால், அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. உண்மை வெளிவரும் என்று நம்புகிறோம். அவரது நிலை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. அவரது இதய துடிப்பு விகிதம் 50 ஆக குறைந்து உள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ .5 லட்சம் மற்றும் சிறு காயங்கள் உள்ளவர்களுக்கு தலா ரூ .1 லட்சம் வழங்கப்படும்  என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்