ரெயிலுக்காக காத்திருந்தபோது மேற்கு வங்காள மந்திரி மீது வெடிகுண்டு வீச்சு பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த மந்திரி மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-02-18 23:00 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல், மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருப்பவர் ஜாகிர் உசேன். இவர் ஜாங்கிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10 மணியளவில், கொல்கத்தா செல்வதற்காக, முர்சிதாபாத் மாவட்டம் நிம்திதா ரெயில் நிலையத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார். கொல்கத்தா ரெயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள், ஜாகிர் உசேனை நோக்கி வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

வெடிகுண்டு வெடித்ததில், ஜாகிர் உசேன் படுகாயமடைந்தார். அவரது இடது காலில் காயம்பட்டு ரத்தம் கொட்டியது. சில ஆதரவாளர்களும் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். முதலில், ஜாங்கிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மந்திரி ஜாகிர் உசேன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் நேற்று காலை கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். ஜாகிர் உசேனுக்கு விரல்களிலும், காலிலும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பிர்ஹாத் ஹக்கிம் என்ற மந்திரி தெரிவித்தார்.

மந்திரி மீதான வெடிகுண்டு தாக்குதல் பற்றிய விசாரணையை சி.ஐ.டி. பிரிவிடம் மேற்கு வங்காள அரசு ஒப்படைத்துள்ளது. சம்பவ இடத்தை தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அடிக்கடி நடந்துள்ளது. ஆனால், மந்திரி ஒருவர் மீது பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

இந்த தாக்குதலுக்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது ஒரு சதித்திட்டம். சிலர் அவரை தங்கள் கட்சியில் சேருமாறு சில மாதங்களாக வற்புறுத்தி வந்தனர். விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ரெயில்வே நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கு ரெயில்வே நிர்வாகம் எப்படி பொறுப்பை தட்டிக்கழிக்க முடியும்? தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதலுக்கு பா.ஜனதாவே காரணம் என்று மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபுதாகிர் கான் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதை மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் நிராகரித்துள்ளார். முர்சிதாபாத், கிரிமினல்களின் சொர்க்கமாகி விட்டதாகவும், உட்கட்சி பூசலால் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் கண்டனம் தொிவித்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, நேற்றுமுன்தினம் இரவு, கொல்கத்தாவில் பா.ஜனதா பிரமுகர் சுவேந்து அதிகாரி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அதில், மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவாஜி சிங்கராய் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்