காரில் போதை பொருள் கடத்தல்: பா.ஜ.க. பெண் நிர்வாகி நண்பருடன் கைது

மேற்கு வங்காளத்தில் போதை பொருள் கடத்திய வழக்கில் பா.ஜ.க.வின் இளைஞரணி பொது செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-20 07:23 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தா நகரில் நியூ அலிப்பூர் பகுதியில் பா.ஜ.க.வின் இளைஞரணி பொது செயலாளர் பமீலா கோஸ்வாமி காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.  அவருடன் அவரது நண்பர் பிரபீர் குமார் டே என்பவரும் சென்றுள்ளார்.

இந்நிலையில், கோஸ்வாமி போதை பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  கோஸ்வாமி காரை நிறுத்தும் இடத்தில் வைத்து 8 வாகனங்களில் வந்த நியூ அலிப்பூர் காவல் நிலைய போலீசார் குழு அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவரது கைப்பையில் சோதனை செய்ததில், 100 கிராம் எடை கொண்ட, லட்சக்கணக்கான மதிப்புள்ள கோக்கைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர்.  இதனையடுத்து கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, சில காலங்களாக கோஸ்வாமி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.  அவர் தனது நண்பர் பிரபீருடன் சேர்ந்து போதை பொருட்களை வாங்குபவரிடம் விற்பதற்காக இன்று செல்கிறார் என எங்களுக்கு தகவல் கிடைத்தது என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து வருகிறது.  போதை பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏதும் உள்ளதா? என்பது பற்றி அறியும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  காரில் இருந்த பமீலா கோஸ்வாமியின் பாதுகாவலரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்