புனேவில் இரவு நேர ஊரடங்கு அமல், கல்வி நிலையங்கள் பிப்.28-வர மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 24 மணி நேரத்தில் 849- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2021-02-21 09:54 GMT
புனே,

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கு குறைந்து இருந்த நிலையில் தற்போது நோயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி உள்ளது.

2-வது கட்ட கொரோனா பரவல் மாநிலத்தில் தலை தூக்கி விடுமோ? என்கிற அச்சம் அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘‘உருமாறிய கொரோனா வைரஸ்’’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநில மக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு துறை அதிகாரிகள் மீண்டும் முழு வீச்சில் களம் இறங்கி உள்ளனர்.

புனேவில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் அந்நகரத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் எனவும் புனே மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்