கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கர்நாடகா கட்டுப்பாடு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

கேரள மக்கள் கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பது தொடர்பாக பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-02-23 12:20 GMT
திருவனந்தபுரம்,

கொரோனா பரவத் தொடங்கி ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இருப்பினும் அதன் பரவல் இன்னும் குறையவில்லை. மராட்டியம், கேரளாவில் கொரோனா 2-வது அலை தொடங்கியுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு விதிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் கேரளா, மராட்டியத்தில் இருந்து வருவோரை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்து வருகிறார்கள்.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கேரளா-கர்நாடக எல்லையான தளப்பாடியில் கர்நாடக சுகாதாரத் துறையினர், போலீசார் தீவிர சோதனை நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வருவோரை மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கேரள மக்கள் கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பது தொடர்பாக பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் எழுதிய கடிதத்தில்,

கேரள மக்கள் கர்நாடகத்திற்குள் நுழைய அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், மாணவர்கள், மருத்துவ உதவிக்காக செல்பவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கர்நாடகத்திற்குள் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த தடையானது, எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து செயல்பாடுகளுக்கு மத்திய அரசு அளித்த தளர்வுகளை மீறுவதாக உள்ளது. ஆகையால், இந்த பிரச்னையில் விரைந்து தலையிட்டு கர்நாடகத்திற்குள் கேரள மக்கள் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்