வயநாடு தொகுதியில் சுற்றுச்சூழல் மண்டலம்: கேரள அரசின் முடிவுக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு

வயநாடு வன விலங்குகள் சரணாலயத்தை சுற்றிலும் சுற்றுச்சூழல் மண்டலம் அமைப்பது தொடர்பான கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-23 22:40 GMT
சுற்றுச்சூழல் மண்டலம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வயநாடு வன விலங்குகள் சரணாலயத்தை சுற்றி உள்ள 3.4 கி.மீ. தூர பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த மாதம் 28-ந் தேதி வெளியிட்டது. இதனால், வயநாடு மக்களிடையே அச்சம் எழுந்தது.

இப்பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். ராகுல் காந்தியும், மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார்.

இருளில் தள்ளி விடும்
இந்தநிலையில், வயநாட்டில் 2 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி சென்றிருந்தார். பயணத்தின் முடிவில் நேற்று அவர் இதுதொடர்பாக டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வயநாடு வன விலங்குகள் சரணாலயத்தை சுற்றிலும் சுற்றுச்சூழல் மண்டலம் அமைப்பது பற்றிய கேரள அரசின் நிலைப்பாடு, சரணாலயத்தை ஒட்டி வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.அரசின் நடவடிக்கை, அம்மக்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளி விடும். ஆகவே, இதை சரிசெய்யும் நடவடிக்கைகள் உடனே தொடங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேரள மந்திரி பதில்

இதற்கு கேரள மாநில வனத்துறை மந்திரி கே.ராஜு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
சுற்றுச்சூழல் மண்டலம் அமைப்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் தீர்மானிக்கிறது. எனவே, டெல்லியில் வசிக்கும் ராகுல்காந்தி, சுற்றுச்சூழல் மண்டலத்தில் இருந்து மக்கள் வசிப்பிடங்களை விடுவிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு யோசனை தெரிவிக்க வேண்டும். நாங்களும் இதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்