புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது

Update: 2021-02-25 13:59 GMT
புதுடெல்லி

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3  என எதிர்க்கட்சி களின் பலம் 14 ஆகவும் சம நிலையில் இருந்தது. இதையடுத்து சட்ட சபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்- அமைச்சருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

இந்தநிலையில்  சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக் கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து ஜனாதிபதிக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் புதுச்சேரியில் ஜனாதிபதி  ஆட்சியை அமல்படுத்தி உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இது குறித்து  உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதுகுறித்து அறிவிப்பை அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்