உத்தரகாண்டில் சாலை விரிவாக்க போராட்டத்தில் கற்கள் வீச்சு; போலீசார் பலர் காயம்

உத்தரகாண்டில் சாலை விரிவாக்க போராட்டத்தில் ஈடுபட்டோர் கற்களை வீசியதில் போலீசார் காயமடைந்த விவகாரத்தில் முதல் மந்திரி ராவத் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-03-01 17:32 GMT
டேராடூன்,

உத்தரகாண்டின் கர்செயின் என்ற பகுதியருகே போராட்டக்காரர்கள் சிலர் காட் பகுதியில் இருந்து நந்த்பிரயாக் வரை 19 கி.மீட்டர் தொலைவுக்கு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை போலீசார் தீவாளி கல் என்ற பகுதியில் தடுத்து நிறுத்த முயன்றனர்.  இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  இதுபற்றி சமோலி போலீஸ் சூப்பிரெண்டு யஷ்வந்த் சிங் கூறும்பொழுது, தீவாளி கல் பகுதியில் போராட்டக்காரர்களை நாங்கள் தடுத்து நிறுத்த முயன்றோம்.

ஆனால், அவர்கள் தடுப்புகளை உடைக்க முயற்சி மேற்கொண்டனர்.  நாங்கள் அவர்களை கலைந்து போக செய்தபொழுது, எங்கள் மீது கற்களை வீசி எறிந்தனர்.  இதில், போலீஸ் அதிகாரிகள் பலர் காயமடைந்தனர் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பற்றி தன்னிச்சையாக கையில் எடுத்த முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டு உள்ளார்.  இதனை உத்தரகாண்ட் முதல் மந்திரி அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்