கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? எடியூரப்பா விளக்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் அவை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Update: 2021-03-17 19:52 GMT

பெங்களூரு, 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் அவை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எடியூரப்பா கூறியதாவது: 
 
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் 3 தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 3,500 மையங்கள் மூலம் தினமும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடதிட்டமிட்டுள்ளோம். மத்திய அரசின் உத்தரவுப்படி மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசி போட முடியும்.

முதியோர் இல்லங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இத்தகைய இடங்களில் மருத்துவ பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் நியமனம் செய்யப்படுவார்கள். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதல்படி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. பகல் நேர, இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்த மாட்டோம். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். தகுதியான அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பரிசோதனை, தொற்று கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல் முறையை பின்பற்றும்படி பிரதமர் கூறினார். அதன்படி மாநில அரசு செயல்படும். கொரோனா பரிசோதனை மேலும் அதிகரிக்கப்படும். கொரோனா பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

தடுப்பூசி நமது உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்குமே தவிர, வைரசை அழிக்காது. அதனால் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். பெங்களூரு, பீதர், கலபுரகியில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்” இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்