சில துரோகிகளும், பேராசை கொண்டவர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்; மம்தா பானர்ஜி

சில துரோகிகளும், பேராசை கொண்டவர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர் என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

Update: 2021-03-17 22:07 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 29-ந்தேதி வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10-ந்தேதி தனது தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

எனினும் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஜஹார்கிராம் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி தனது காலில் ஏற்பட்ட காயத்துக்கு பா.ஜ.க.வே காரணம் என குற்றம் சாட்டினார்.

இதுபற்றி அவர் பேசுகையில் ‘‘அவர்கள் (பா.ஜ.க.) தேர்தலின் போது நான் வெளியே செல்ல முடியாதபடி என்னை வீட்டுக்குள் வைத்திருக்க விரும்பினர். எனவே என் காலில் காயத்தை ஏற்படுத்தினர். என் குரலை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. நாம் பாஜகவை தோற்கடிப்போம்’’ என்றார். 

மேலும் அவர் ‘‘நான் என் வாழ்வில் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளேன். தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியினர் என்னை தாக்கினர், தற்போது அதே வேலையை பா.ஜ.க.வினர் செய்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது பா.ஜ.க.வினராக மாறிவிட்டனர். சில துரோகிகளும், பேராசை கொண்டவர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்’’ என கூறினார்.

மேலும் செய்திகள்