ஜமைக்காவுக்கு கொரோனா தடுப்பூசி; பிரதமர் மோடிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நன்றி

ஜமைக்கா நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டிரி ரஸ்செல் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

Update: 2021-03-18 10:53 GMT
புதுடெல்லி,

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன.  அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை போட மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன.  இதன்பின்னர் கடந்த 1ந்தேதியில் இருந்து 60 வயது கடந்த முதியோர்கள் மற்றும் 45 வயது கடந்த இணை நோய் கொண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு தேவை போக கொரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.  

இவற்றில், பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், மியான்மர், சிசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானிய உதவியாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கும் மானிய உதவியாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் பணிகளும் நடந்துள்ளன.  இதுவரை மானிய அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் உலகின் பல்வேறு நாடுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கி வருகிறது.

இதுதவிர ஜமைக்கா உள்ளிட்ட தொலைதூரத்தில் அமைந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கும், கனடாவுக்கும் கொரோனா தடுப்பூசிகள் தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜமைக்கா நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டிரி ரஸ்செல் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், பிரதமர் மற்றும் இந்திய தூதரகத்திற்கு நன்றி.  ஜமைக்கா மக்கள் இதனை உண்மையில் பாராட்டுகின்றனர்.  இந்தியாவும், ஜமைக்காவும் நெருங்கிய சகோதரர்களாக உள்ளனர்.  இதனை நான் பாராட்டுகிறேன்.  பாதுகாப்புடன் இருங்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்