நாடு முழுவதும் 42 ஆயிரம் அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 42 ஆயிரம் அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-18 18:54 GMT
புதுடெல்லி, 

பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று பதிலளித்தார்.

அப்போது அவர் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பேசினார். அவர் கூறுகையில், ‘கடந்த 2018-19-ம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 10,83,747 அரசு பள்ளிகளில் 10,41,327 பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளன. மேலும் 10,68,726 பள்ளிகளில் கழிவறை வசதிகள் உள்ளன’ என்று தெரிவித்தார்.

இதன் மூலம் 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை வசதியும் இல்லாத அவல நிலை நீடித்து வருவது தெரியவந்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து (அரசு, தனியார், உதவிபெறும்) பள்ளிகளிலும் ஆண், பெண்களுக்கு என தனித்தனி கழிவறைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துமாறு அந்தந்த அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்