இலங்கைக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்- ப சிதம்பரம் டுவிட்

இலங்கையில் மனித உரிமை மறுக்கப்படும் தமிழர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2021-03-21 09:59 GMT
புதுடெல்லி,

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை கவுன்சில் வாக்கெடுப்புக்கு வர உள்ளது.  

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா   ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இலங்கையில், குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இருந்ததை, இருப்பதை அந்த நாடு மறுத்து வருவது வேதனைக்குரியது. 

அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா நிச்சயம் ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமை மறுக்கப்படும் தமிழர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டும்’ என்று  தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்