கையெறி குண்டுகள் பறிமுதல் வழக்கு; 7 காலிஸ்தானியர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்

கையெறி குண்டுகள் பறிமுதல் வழக்கில் 7 காலிஸ்தானியர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Update: 2021-03-22 20:48 GMT
புதுடெல்லி,

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ராஜா சன்சி பகுதிக்கு உட்பட்ட குக்கிரவாலா என்ற இடத்தில் ஹர்ச சீனா என்ற பேருந்து நிறுத்தத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 2ல் போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் பை ஒன்றை வீசி விட்டு தப்பி சென்றனர்.  அவற்றை பஞ்சாப் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.  அதில், 2 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு சாம்சங் மொபைல் போன் இருந்துள்ளது.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை மீண்டும் ஒரு வழக்காக பதிவு செய்தது.  இதுபற்றிய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  இதன்படி, பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதி ஹர்மீத் சிங் என்பவரின் உத்தரவின் பேரில் பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு போதை பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதற்கான வேலைகள் நடந்துள்ளன.

இந்த நபர் காலிஸ்தான் விடுதலை படை என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.  இதற்காக பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு வினியோகிக்கப்பட்டு உள்ளன.  இதில், ஜஜ்பீர் சிங் சாம்ரா மற்றும் வரீந்தர் சிங் சகால் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, கையெறி குண்டுகளை எடுத்து சென்று, பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்காக அவற்றை மறைத்து வைத்து உள்ளனர்.  இதேபோன்று, இந்தியாவில் இருந்து தப்பி கம்போடியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு சென்ற குல்வீந்தர்ஜித் சிங் என்பவருக்கு தளவாடங்கள் வழங்குதல், இடவசதி ஏற்படுத்தி தருதல், வர்த்தக விசா வாங்கி தருதல் உள்ளிட்ட விசயங்களையும் அவர்கள் மேற்கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்பேரில், பஞ்சாப்பின் தான் தரன், அமிர்தசரஸ், லூதியானா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 காலிஸ்தானியர்களுக்கு எதிராக ஐ.பி.சி.யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  இந்த குற்றப்பத்திரிகையானது, பஞ்சாப்பின் மொகாலி நகரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்