ஒற்றை காலில் நின்று போராடி பா.ஜ.க.வை விரட்டி அடிப்பேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்

சட்டசபை தேர்தலுக்காக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2021-03-23 14:57 GMT

சில நாட்களுக்கு முன்பு பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு காலில் அடிபட்டது. இதையடுத்து காலில் கட்டுபோட்டபடி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பங்குரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசியதாவது:-

மேற்கு வங்காளத்துக்கு என்று தனி கலாசாரமும், பண்பாடுகளும் உள்ளன. இதை சீர்குலைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் மேற்கு வங்காளத்தின் கலாசாரத்தை பாதுகாக்க முடியாது. பா.ஜ.க. பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே செய்து விட்டோம்.

பா.ஜ.க. எங்களோடு மோதாமல் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது. எல்லா இடத்திலும் நாங்கள் சவால் அளிப்போம். நான் இப்போது ஒற்றை காலில் நின்று போராடிக்கொண்டு இருக்கிறேன். நான் ஒரு போதும் போராட்ட களத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். நான் அரசியல் களத்தில் இருந்து வெளியேறினால் மாநிலத்தின் நிலைமை மோசமாகிவிடும்.

எனவே தான் ஒரு கால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் பிரசாரத்தை விடக்கூடாது என்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். பா.ஜனதாவை விரட்டி அடிப்பதற்கு எனக்கு ஒரு கால் போதும். எனது கடைசி மூச்சு உள்ளவரை நான் முடங்க மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்