மராட்டியத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த பாஜக கடும் எதிர்ப்பு

ஊரடங்கை அமல்படுத்த அதிக பொருளாதார பாதிப்பை சந்திக்காத வகையில் திட்டத்தை தயாரித்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-03-29 22:10 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மலைக்க வைக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மராட்டிய அரசு விழிபிதுங்கி நிற்கிறது. நாளுக்குநாள் உயரும் பாதிப்பு எண்ணிக்கை மக்களையும் அச்சத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஊரடங்கை அமல்படுத்த அதிக பொருளாதார பாதிப்பை சந்திக்காத வகையில் திட்டத்தை தயாரித்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

முதல்-மந்திரியின் இந்த அறிவிப்பு குறித்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவரான சந்திரகாந்த் பாட்டீல் நேற்று கூறியதாவது:-

மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒருபோதும் தீர்வாகாது. அப்படியே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் நீங்கள்(மாநில அரசு) பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த ஒரு நிவாரண தொகுப்பையும் வழங்க முன்வர மாட்டீர்கள். கடந்த ஒரு வருட காலமாக மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை “மாதோஸ்ரீ ” இல்லத்தில் உட்கார்ந்திருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

இரவு ஊரடங்கில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. யாரும் இரவில் வெளியே செல்வதில்லை. உங்களுடன் உள்ள சிலர் தான் இரவு வாழ்க்கையை விரும்புகிறார்கள். நீங்கள் உண்மையிலேயே ஊரடங்கை அமல்படுத்த விரும்பினால் ஒரு தொகுப்பை அறிவித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள்.கொரோனா பரிசோனையை அதிகரித்தல் மற்றும் தொற்று தடம் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவை கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகும். ஆனால் ஊரடங்கு இதற்கு பதில் ஆகாது’ இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்