வாரணாசி தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிட திட்டமா? மம்தா பானர்ஜி, தோல்வியை உணர்ந்து வெளிமாநிலத்தில் இடம் தேடுகிறாரா? பிரதமர் மோடி கேள்வி

வாரணாசி தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டுள்ள மம்தா பானர்ஜி, தனது தோல்வியை உணர்ந்து, வேறு மாநிலத்தில் தொகுதி தேடுகிறாரா? என்று பிரதமர் மோடி கேள்வி விடுத்துள்ளார்.

Update: 2021-04-06 22:09 GMT
பா.ஜனதா அலை
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. 3 கட்ட தேர்தல்கள் முடிந்தநிலையில், 4-வது கட்ட தேர்தலை சந்திக்கும் கூச்பேகர் பகுதியில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளம் முழுவதும் பா.ஜனதா அலை வீசி வருகிறது. நிச்சயமாக பா.ஜனதா புதிய அரசு அமைக்கும். மம்தா பானர்ஜி கோபப்படுவதை பார்த்தால், அவர் தோல்வி அடையப்போவதை உணர்ந்து கொள்ளலாம்.முதல் 2 கட்ட தேர்தல்களை பார்க்கும்போதே, மம்தா பானர்ஜி ஆட்சியை இழப்பது உறுதியாகி விட்டது.

நழுவும் ஓட்டுகள்
மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பொட்டு வைத்தவர்களையும், காவி அணிந்தவர்களையும் பார்த்தாலே பிரச்சினைதான். அவர் சமீபத்தில் பேசும்போது, முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரிணாமுல் காங்கிரசுக்கே ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்மூலம், முஸ்லிம் ஓட்டுகள் அவரது கையை விட்டு நழுவிக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.இதேபோல், இந்துக்கள் அனைவரும் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று நாம் கூறியிருந்தால், எல்லோரும் நம்மை விமர்சனம் செய்திருப்பார்கள். தேர்தல் கமிஷன் நமக்கு நோட்டீசு அனுப்பி இருக்கும்.

சூப்பர் மனிதர்களா?
பா.ஜனதா வெற்றி பெறும் என்று கணிக்க பா.ஜனதா தலைவர்கள் என்ன கடவுளா? அல்லது சூப்பர் மனிதர்களா? என்று மம்தா பானர்ஜி கேட்டுள்ளார். இதை கணிப்பதற்கு சூப்பர் மனிதர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜனதாவுக்கு ஆதரவான அலையே அதை சொல்லி விடும்.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் எனக்கு எதிராக மம்தா போட்டியிடுவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. அப்படியானால், மம்தா பானர்ஜி, இந்த தேர்தலில் தான் தோற்கப்போவதை ஏற்றுக்கொண்டு, வேறு இடம் தேடுகிறார் என்று அர்த்தம். அதிலும், வெளிமாநிலத்தில் அவர் தொகுதி தேடுகிறார்.

சுயமரியாதை
பணம் வாங்கிக்கொண்டு பிரதமரின் கூட்டத்துக்கு மக்கள் செல்வதாக மம்தா கூறியுள்ளார். இதன்மூலம், வங்காள மக்களின் சுயமரியாதையை கேவலப்படுத்தி உள்ளார். தனது தோல்வியை உணர்ந்துதான், அவர் தேர்தல் கமிஷன் முதல் ஓட்டு எந்திரம்வரை எல்லாவற்றையும் விமர்சித்து வருகிறார்.

இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் செய்திகள்