கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு பஞ்சாப் முழுவதும் இரவு நேர ஊரடங்கு - அரசியல் கூட்டங்களுக்கு தடை

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பஞ்சாப் முழுவதும் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-07 21:34 GMT
சண்டிகார், 

நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்று, பஞ்சாப். இங்கு 2.57 லட்சத்துக்கும் அதிகமானோர், வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். 7,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைப்பதற்காக அங்கு 12 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று உத்தரவிட்டார்.

இந்த ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும். வரும் 30-ந்தேதிவரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

அரசியல் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று கூறுகையில், “கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் அரசியல் பொதுக்கூட்டங்களில் கெஜ்ரிவால், சுக்பீர் பாதல் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டது ஆச்சரியம் அளிக்கிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளிடம் நான் கூறியும் கண்டுகொள்ளப்படவில்லை. எனவே அரசியல் தொடர்பான கூடுகைகளுக்கு தடை போட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தும்படி போலீஸ் டி.ஜி.பி. டிங்கர் குப்தாவுக்கு முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்