சத்தீஷ்காரில் துப்பாக்கி சண்டையில் 24 பேர் பலியான சம்பவம்; நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட சி.ஆர்.பி.எப். கமாண்டோ விடுவிப்பு

சத்தீஷ்காரில் துப்பாக்கி சண்டையை தொடர்ந்து நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட சி.ஆர்.பி.எப். கமாண்டோ விடுவிக்கப்பட்டார்.

Update: 2021-04-08 23:24 GMT
ராய்ப்பூர், 

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர்-சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ந்தேதி பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 24 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர். ஒரு வீரரை காணவில்லை.

அந்த வீரரை தாங்கள் கடத்திச்சென்று பிணைக்கைதியாக வைத்திருப்பதாக நக்சலைட்டுகள் அறிவித்தனர். பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தரை நியமிக்குமாறு அரசை அவர்கள் வலியுறுத்தினர்.

கடத்திச் செல்லப்பட்ட வீரரின் பெயர் ராகேஷ்வர் சிங் மனாஸ் என்று தெரியவந்தது. அவர் சி.ஆர்.பி.எப்.பின் ‘கோப்ரா’ கமாண்டோ பிரிவின் கமாண்டோவாக இருந்து வருகிறார். காஷ்மீரின் ஜம்முவை சேர்ந்தவர். அவரை விடுவிக்கக்கோாி, ஜம்முவில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இந்தநிலையில், கமாண்டோ ராகேஷ்வர் சிங் மனாஸ் நேற்று நக்சலைட்டுகளால் விடுவிக்கப்பட்டார்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 2 பிரபல நபர்களை நியமித்து, சத்தீஷ்கார் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து கமாண்டோவை நக்சலைட்டுகள் விடுவித்தனர். பின்னர், தரண் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாமுக்கு கமாண்டோ அழைத்து வரப்பட்டார்.

இதற்கிடையே, கமாண்டோ விடுவிக்கப்பட்ட தகவலை அறிந்து, ஜம்முவில் உள்ள அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அவருடைய 5 வயது மகள், அவரது புகைப்படத்துக்கு முத்தம் கொடுத்தாள்.

கமாண்டோவின் மனைவி மீனு கூறியதாவது:-

இதுதான் என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம். என் கணவர் விடுவிக்கப்படுவார் என்று நம்பிக்கையுடனே இருந்தேன். இதற்காக பாடுபட்ட மத்திய, மாநில அரசுகளுக்கும், சோதனையான நேரத்தில் எங்களுக்கு துணையாக நின்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நக்சலைட்டுகளால் விடுவிக்கப்பட்ட வீரர் ராகேஷ்வர் சிங் மனாசுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொலைபேசி மூலமாக பேசினார்.

அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக தெரிகிறது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்