டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடிக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடி 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Update: 2021-04-09 01:37 GMT
புதுடெல்லி,

இந்தியாவில், கொரோனா வைரசை முறியடிக்க தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டன. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் போடப்பட்டது.

60 வயதை தாண்டியவர்களுக்கும், 45 வயதை கடந்த நோயாளிகளுக்கும் மார்ச் 1-ந் தேதி முதல் தடுப்பூசி போடத் தொடங்கினர்.

பிரதமர் மோடி, முதல் நாளிலேயே முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு காலை 6.30 மணிக்கே சென்று அவர் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டுக்கொண்டார். கோவேக்சின், முற்றிலும் இந்திய தயாரிப்பு ஆகும்.

முதல் தவணை தடுப்பூசி போட்டு, 28 நாட்கள் கழித்து, 2-வது தவணை தடுப்பூசி போடுவது அவசியம்.

எனவே, பிரதமர் மோடி நேற்று 2-வது தவணை ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதே எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் காலை வேளையில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுச்சேரியை சேர்ந்த நர்சு பி.நிவேதா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நர்சு நிஷா சர்மா ஆகியோர் பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தினர். இவர்களில், புதுச்சேரி நர்சு நிவேதா, பிரதமருக்கு ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் வரும் தகவலை காலையில்தான் தங்களிடம் அதிகாரிகள் தெரிவித்ததாகவும், இச்சந்திப்பு மறக்க முடியாத ஒன்று என்றும் நர்சு நிஷா சர்மா கூறினார்.

2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்ட தகவலை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

வைரசை முறியடிக்க நமக்கு இருக்கும் வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் தகுதியானவர் என்றால், விரைவிலேயே போட்டுக்கொள்ளுங்கள். ‘கோவின்’ இணையதளத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்