பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிக்கு பார்சலில் வந்த போதைப்பொருள் சிக்கியது

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கைதிக்கு, பார்சலில் வந்த போதைப்பொருள் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Update: 2021-04-10 21:45 GMT
பெங்களூரு:

பார்சலில் வந்த போதைப்பொருள்

  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விசாரணை கைதிகள், வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கூட இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்கு தின்பண்டங்கள், உடைகளை உறவினர்கள் அனுப்பி வைப்பது வழக்கம்.

  இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து ஒரு பார்சல் வந்து இருந்தது. அந்த பார்சலில் கைதி எண் 1716 என்றும், தின்பண்டம் உள்ளதாகவும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பார்சல் மீது சந்தேகம் அடைந்த சிறை போலீசார், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குண்டுவெடிப்பு வழக்கு

  இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவம் குறித்து பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.

  பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதைப்பொருளை கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஜினெப் என்பவர் அனுப்பியதும், அந்த போதைப்பொருள் 2008-ம் ஆண்டு மடிவாளாவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முஜீப் என்பவருக்கு வந்ததும் தெரியவந்தது. இதனால் ஜினெப்பை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கி கொண்டு, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில் தற்போது அங்கு போதைப்பொருள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்