மராட்டியத்தில் முழு ஊரடங்குக்கு ஆதரவாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் கருத்து

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

Update: 2021-04-11 10:13 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசியமற்ற கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனால் நிலைமையை சமாளிக்க முடியாவிட்டால் 15 நாட்கள் முதல் 3 வாரம் முழு ஊரடங்கு தேவைப்படும் என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதை கருத்தை பேரிடர் நிவாரணத்துறை மந்திரி விஜய் வடேடிவாரும் கூறியிருந்தார். இதையடுத்து, நேற்று மராட்டியத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத், மராட்டியத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு ஆதரவாக பேசியுள்ளார். இது குறித்து சஞ்செய் ராவத் கூறுகையில், “ தேவேந்திர பட்னாவிஸ் முன்னாள் முதல் மந்திரி. அவர் சொல்கிறார், மக்கள் ஊரடங்கை விரும்பவில்லை என்று. ஆமாம், எங்களுக்கும் தெரியும். 

ஆனால், மக்களின் உயிர்களை காப்பாற்ற வேறு என்ன தீர்வு உள்ளது. பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் அமர்ந்து கொண்டு எங்களுக்கு பாடம்  எடுக்கக் கூடாது.  அவர் மராட்டியத்திற்கு வந்து பார்க்க வேண்டும். அவருக்கும் இந்த மாநிலத்துடன் தொடர்புள்ளது. கொரோனா பிரச்சினையை யாரும் அரசியலாக்கக் கூடாது” என்றார்.

மேலும் செய்திகள்