திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி

இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-04-14 09:20 GMT
புதுடெல்லி,

நாட்டின் உயர்கல்வி முன்னணி அமைப்பான இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது 95வது ஆண்டு கூட்டத்தை இந்தாண்டு ஏப்ரல் 14-15ம் தேதிகளில் நடத்துகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது கடந்த கால சாதனைகளை தெரிவிக்கவும், தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், வருங்காலத்துக்கான திட்ட நடவடிக்கைகளை வரையறுக்கும் நிகழ்வாக இந்தக் கூட்டம் உள்ளது.

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் உரையாறினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் ஜனநாயக பாதைக்கு வலுவான அடித்தளத்தை, அண்ணல் அம்பேத்கர் அமைத்து கொடுத்துள்ளார்.

அம்பேத்கர் அமைத்து கொடுத்த பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டியது நமது கல்வி அமைப்பின் தலையாய கடமை.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கான 3 கேள்விகளை ஆராய வேண்டும், அவர்கள் என்ன திறன் கொண்டவர்கள், அதிக ஆர்வத்துடன் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் மற்றும் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது தான்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக கிஷோர் மக்வானா எழுதிய டாக்டர் பிஆர் அம்பேத்கர் தொடர்பான நான்கு புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். குஜராத் ஆளுநர், முதல்-மந்திரி மற்றும் மத்திய கல்வி மந்திரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.

மேலும் செய்திகள்