ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை மூட உத்தரவு: புதுச்சேரி கவர்னரின் காரை வியாபாரிகள் முற்றுகை திடீர் போராட்டத்தால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் காந்திவீதியில் கடைகளை மூட உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி கவர்னரின் காரை முற்றுகையிட்டு வியாபாரிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-18 21:45 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி காந்திவீதியில் சண்டே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் சண்டே மார்க்கெட் செயல்படும் போது நிரந்தர கடைகளும் திறக்கப்பட்டு இருக்கும். இதனால் வியாபாரிகளுக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதையொட்டி காந்திவீதியில் செயல்படும் நிரந்தர கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட வேண்டும் என்று நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நகராட்சி ஊழியர்களிடம், வியாபாரிகள் நேற்று காலை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திடீர் முற்றுகை

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து விட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கிருந்து காரில் புறப்பட்டார். நேருவீதி-காந்திவீதி சந்திப்பில் வந்தபோது, நிரந்தர கடை வியாபாரிகள் கவர்னரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

இதற்கிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காரில் இருந்து இறங்கி சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்து கவர்னரிடம் அவர்கள் முறையிட்டனர். உடனே கவர்னர், அருகில் நின்ற மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க்கை அழைத்து நிரந்தர வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகளை திறக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்