நாட்டின் முன்னணி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் முன்னணி மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2021-04-19 09:32 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை நாளுக்கு நாள் புதிய உச்சமடைந்து வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,44,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 19,29,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாட்டின் முன்னணி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார். 

அதேபோல், மாலை 6 மணிக்கு இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், மருந்து நிறுவன தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி, விநியோகத்தை விரைவு படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்