புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் - அரவிந்த கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள்

புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2021-04-19 12:22 GMT
புதுடெல்லி

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக அசுர வேகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000 தாண்டி விட்டது. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு,  டெல்லியில் ஒரு வாரத்திற்கு (இன்று இரவு முதல் வரும் 26-ம் தேதி வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய காரணங்கள் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக டெல்லியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம். 6 நாள்களுக்கு மட்டுமே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்கள் சென்றால் உங்கள் பயணத்திற்கே இந்த நாள்கள் சரியாகிவிடும். எனவே, இங்கேயே இருங்கள். டெல்லி அரசு உங்களை கவனித்துக்கொள்ளும் என்று கைகூப்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், விருப்பமில்லாமல் வேறுவழியின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வியாபாரத்தில் இழப்புகளை எதிர்கொள்கிறார்கள், குறிப்பாக ஏழை மக்களுக்கு தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு இந்த காலம் மிகவும் கடினம்.

எனினும் இந்த ஆறு நாள்களில் முழுமையாக கொரோனா பரவலை ஒழிக்க முடியாது என்றாலும் ஓரளவுக்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்