இத்தாலிய கப்பல் வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு இழப்பீடு எங்கே? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2021-04-19 23:08 GMT
புதுடெல்லி, 

கேரள கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் அஜஸ்பிங்க், கேரள மீனவர் ஜெலஸ்டின் ஆகியோரை, அவ்வழியாக வந்த தனியார் நிறுவன சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்களான இத்தாலியைச் சேர்ந்த மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் 2 இத்தாலி வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2013-ம் ஆண்டு சிறை விடுப்பில் இத்தாலி சென்ற அவர்களை, திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது. இந்திய சட்டங்களின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரி சர்வதேச கோர்ட்டையும் நாடியது.

மேல்முறையீட்டு மனு

அவர்கள் மீது இந்தியா சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு பெற முடியும் என்று சர்வதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஆனால் இந்திய தரப்புக்கு இழப்பீடு பெறுவதற்கு உரிமை உள்ளது என நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள பெர்மனென்ட் கோர்ட் ஆப் ஆர்பிட்ரேஷன் தெரிவித்தது.

இதற்கிடையே, மாசிமிலியானே லாத்தோரே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

மத்திய அரசுக்கு உத்தரவு

இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் 9-ந் தேதி நடைபெற்றபோது நீதிபதிகள், பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி வழங்கிய ரூ.10 கோடி இழப்பீட்டுத் தொகையை சுப்ரீம் கோர்ட்டு வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அந்த தொகை மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும், இழப்பீட்டுத்தொகை செலுத்தப்பட்ட ஒரு வாரம் கழித்து, வழக்கு விசாரணையை முடித்துவைக்கக் கோரும் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

இழப்பீடு எங்கே?

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு பதிலாக அவரது அலுவலகத்தில் பணியாற்றும் வக்கீல்கள் ஆஜராகி, துஷார் மேத்தா வேறு வழக்கில் ஆஜராகியிருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரினர்.

அப்போது நீதிபதிகள், இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே என வினவினர்.

அதற்கு துஷார் மேத்தா அலுவலக உதவியாளர் வக்கீல் ரஜத் நயார், இந்திய மீனவர்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டுத் தொகை டெபாசிட் பணியை இத்தாலி தொடங்கியுள்ளது. அது கிடைத்தவுடன் மீனவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்