சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கர்நாடகம் முழுவதும் முழு ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக அரசு புதிய விதிமுறைகளை நேற்று அறிவித்தது. அதன்படி கா்நாடகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவுநேர ஊரடங்குஅமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-20 21:41 GMT
பெங்களூரு:

அனைத்துக்கட்சி கூட்டம்

  கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கவர்னர் வஜூபாய் வாலா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி முழு ஊரடங்கு அமல்படுத்தும் முடிவில் மாநில அரசு இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக இரவு 8.45 மணிக்கு டெலிவிஷன் மூலம் நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ‘நாட்டில் முழு ஊரடங்கு இல்லை. முழு ஊரடங்கை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

  இதையடுத்து கர்நாடக அரசு தனது முழு ஊரடங்கு சிந்தனையை மாற்றிக் கொண்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இரவு நேர ஊரடங்கு

  கர்நாடகதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏற்கனவே பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இது இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நேரத்தை மாற்றி இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

  மேலும் வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி-கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மூடப்படுகிறது. ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், விளையாட்டு மையங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகள், அரங்குகள் உள்ளிட்ட இடங்கள் மூடப்படுகின்றன.

விளையாட்டு மைதானங்கள்

  இந்திய நீச்சல் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நீச்சல் குளங்களில் பயிற்சி பெற மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. விளையாட்டு மைதானங்களில் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

  அனைத்து வகையான வழிபாட்டு தலங்களும் மூடப்படுகின்றன. ஆனால் அங்கு பூசாரிகள் பூஜை செய்ய அனுமதி உண்டு. உணவகங்கள் திறக்கலாம். ஆனால் உணவுகளை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பருவமழைக்கு முந்தைய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை. அனைத்து தொழில் நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படலாம். ஆனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

காய்கறி சந்தைகள்

  கடைகள், ரேஷன் கடைகள், பலசரக்கு கடைகள், பழம், காய்கறி கடைகள், பால் பொருட்கள் விற்பனை கடைகள், இறைச்சி கடைகள், கால்நடை தீவன கடைகளுக்கு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. காய்கறி சந்தைகள் திறந்தவெளியில், மைதானங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சந்தைகளை மாற்றும் பணிகளை வருகிற 23-ந் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.

  தங்கும் விடுதிகள் செயல்படலாம். மதுக்கடைகள், மதுபான விடுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்ய மட்டுமே அனுமதி உண்டு. மதுபான விடுதியில் அமர்ந்து மது அருந்த அனுமதி இல்லை. வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், பத்திரிகை, ஊடகங்கள், மின்னணு வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. குளிர்பதன கிடங்குகள் செயல்படலாம்.

வீடுகளில் இருந்து பணியாற்ற...

  தனியார் காவலாளி சேவை வழங்கும் பணிக்கு தடை இல்லை. முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்களை திறக்கலாம். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை முடிந்தவரை வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தேவையான அளவில் மட்டுமே அலுவலகங்களில் ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும். கோர்ட்டுகள் செயல்படலாம். அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே நேரில் வந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

  பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முழுமையாக செயல்படலாம். மாநிலத்திற்குள் உள்ளேயும், மாநிலங்கள் இடையேயும் வாகன போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. இதற்கு தனியாக அனுமதி தேவை இல்லை. பஸ்கள், மெட்ரோ ரெயில்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பஸ், மெட்ரோ ரெயில் உள்பட அனைத்து வகையான போக்குவரத்துக்கும் அனுமதி உண்டு. சரக்கு போக்குவரத்திற்கு எந்த தடையும் கிடையாது.

திருமண நிகழ்ச்சிகள்

  விவசாயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி உண்டு. மருத்துவமனைகள், மருந்தகங்கள் முழுமையாக செயல்படலாம். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். துக்க நிகழச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஊரடங்கு வழிகாட்டுதல் நாளை (அதாவது இன்று) முதல் அடுத்த மாதம் (மே) மாதம் 4-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
  இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்