அசாம்: ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் 3 பேர் கடத்தல்

அசாமில் ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் 3 பேர் ஆயுதம் ஏந்திய மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

Update: 2021-04-21 04:29 GMT
கவுகாத்தி,

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) ஒரு இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் பணிகள் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்நிறுவனம் தனது கிளைகளை அமைத்து எரிவாயு எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், அசாம் மாநிலத்தின் சிவசாஹர் மாவட்டத்தில் உள்ள லக்வா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் கச்சா எண்ணெய் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அங்கு ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், லக்வா பகுதியில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. கிளை நிறுவனத்திற்குள் இன்று அதிகாலை ஆயுதங்களுடன் நுழைந்த மர்மநபர்கள் அங்கு இருந்த ஊழியர்கள் 3 பேரை ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான காரிலேயே கடத்திச்சென்றனர். 

கடத்தப்பட்டவர்களில் 2 ஜூனியர் இன்ஜினியர் உதவியாளர்கள் (உற்பத்தி), 1 ஜூனியர் டெக்னீசியன் என ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து ஓ.என்.ஜி.சி. அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அசாம்-நாகாலாந்து எல்லையில் உள்ள நிமோன்ங்கர் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அசாமில் செயல்பட்டு வரும் ஆயுதம் எந்திய குழுவான அசோமின் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பினரே ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்களை கடத்திச்சென்றிருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து, கடத்தப்பட்ட ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்