ஒரே நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிக்கு 3 வெவ்வேறு விலைகள் எப்படி இருக்க முடியும் -பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதே தடுப்பூசிக்கு 3 வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2021-04-22 12:13 GMT
புதுடெல்லி

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கொரோனா தடுப்பூசி தொடர்பான மத்திய அரசின் கொள்கையானது, 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற அரசின் கடமையில் இருந்து விலக செய்கிறது. இதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதியை மீறி  உள்ளது.

தடுப்பூசிக்கு ஒரே சீரான விலையின் பயனை அனைவரும் ஏற்று கொள்வார்கள். இதனால், இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார சூழ்நிலையை கருதி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வதே, நாட்டிற்கு இலக்காக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் கடுமையான பாடங்களை கற்று கொண்ட போதும், நமது மக்களுக்கு வேதனை இருந்த போதிலும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் மக்கள் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும், சீரம் இந்தியா நிறுவனமானது, 3 விதமான விலை கொள்கையை கடைபிடிக்கிறது. ஒரு டோஸ் மருந்தின் விலை, மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது. இதன் மூலம், தடுப்பூசிக்கு பொது மக்கள் அதிகபட்ச விலையை செலுத்த வேண்டியுள்ளது. மாநில அரசின் நிதி நிலைமையில் கடுமையான சிக்கல் ஏற்படும்.

ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதே தடுப்பூசிக்கு 3 வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற தன்னிச்சையான வேறுபாட்டை அனுமதிக்கும் முடிவு நியாயமானது இல்லை. தற்போதைய சூழ்நிலையில், துயரங்களில் இருக்கும் மக்களிடம், லாபத்தை சம்பாதிக்க இந்திய அரசு அனுமதிப்பது ஏன்.

மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. போதிய அளவு ஆக்சிஜன் இல்லை., மருத்துவ உபகரணங்கள் தேவை நாளுக்கும் நாள் அதிகரித்து வருகிறது இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்