முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மற்றொரு விசாரணை; மராட்டிய மாநில அரசு உத்தரவு

முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மற்றொரு விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-23 01:02 GMT

கார் வெடிகுண்டு வழக்கு

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட வழக்கை தவறாக கையாண்டதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மும்பை போலீசாரை ஓட்டல், பார்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க கட்டாயப்படுத்தியதாக முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதினார்.

இந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்தநிலையில் முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங் மீது இன்ஸ்பெக்டர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை தொிவித்து இருந்தார். அதில் அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தன்னை மீண்டும் பணியில் சேர்க்க பரம்பீர் சிங் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கூறியிருந்தார். இந்த புகார் குறித்து டி.ஜி.பி. சஞ்சய் பாண்டே விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கார் வெடிகுண்டு வழக்கு விசாரணையை தவறான பாதைக்கு கொண்டு சென்ற விவகாரம் குறித்து பரம்பீர் சிங் மீது விசாரணை நடத்த மாநில உள்துறை உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்