மராட்டிய மருத்துவமனையில் தீ விபத்து; 13 பேர் உயிரிழப்பு, விசாரணைக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு

தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-04-23 04:09 GMT
புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புடன் கிட்டதட்ட 7 லட்சம் பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. 

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மராட்டியத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.  இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டம் வாசை என்ற இடத்தில்  உள்ள  கொரோனா மருத்துவமனையில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி கொரோனா நோயாளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13- பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும்  காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு  மராட்டிய  முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்