மராட்டிய மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து 20 நோயாளிகள் தப்பியோட்டம்

மராட்டிய மாநிலத்தின் யவத்மால் மாவட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த 20 கொரோனா நோயாளிகள் தப்பிஓடிவிட்டனர்.

Update: 2021-04-25 23:19 GMT
யவத்மால்,

மராட்டிய மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டம் அம்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சஞ்சய் புரம் தலைமையில் கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், அந்த கிராமத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் காட்டாஞ்சலி தாலுகாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அந்த முகாமில் இருந்த அம்டி கிராமத்தை சேர்ந்த 19 பேர் மற்றும் மேலும் ஒருவர் என மொத்தம் 20 நோயாளிகள் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சஞ்சய் புரத்திற்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தப்பிஓடிய 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து யவத்மால் கலெக்டர் அமோல் யெட்கே கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற மோசமான நடத்தை தொடர்ந்தால், மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு வழக்குகள் கடுமையாக உயரும். தப்பிஓடிய நோயாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்