மும்பையில் குடிசைப்பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு

மும்பையில் குடிசைப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

Update: 2021-04-26 02:25 GMT
மும்பை, 

கொரோனா பரவல் தன்மை குறித்து அறிய மாநகராட்சி மும்பையில் செரோ ஆய்வை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த ஆய்வு கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் 3-வதாக தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா பாதிப்பு குடிசைப்பகுதிகளில் குறைந்தும், மற்ற பகுதிகளில் அதிகரித்து வருவதும் தெரிவந்து உள்ளது.

மாநகராட்சி கடந்த ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்ட ஆய்வில் குடிசைப்பகுதியில் 57 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. 2-வது நடந்த ஆய்வில் இது 45 சததவீதமாக குறைந்தது. தற்போது இது 41.61 சதவீதமாக குறைந்து உள்ளது.

அதேநேரத்தில் மற்ற பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதும் தெரியவந்ததுள்ளது. குடிசைப்பகுதி அல்லாத இடங்களில் முதலில் நடத்தப்பட்ட ஆய்வில் 16 சதவீதம் ேபருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. பின்னர் இது 18 ஆக உயா்ந்து இருந்தது. தற்போது இது மேலும் அதிகரித்து 28.5 ஆகி உள்ளது.

இதேபோல ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் தெரியவந்து உள்ளது. மாநகராட்சி நடத்திய ஆய்வில் பெண்களில் 37.12 சதவீதம் பேருக்கும், ஆண்களில் 35.02 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்