கும்பமேளாவில் புனித நீராடல்; பிரதமர் வேண்டுகோளை ஏற்று அமைதியாக நடந்தது

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்ப மேளாவில் பவுணர்மி தினமான நேற்று கடைசி புனித நீராடலில் பக்தர்கள் ஈடுபட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைவான பக்தர்களே பங்கேற்றனர்.

Update: 2021-04-27 17:34 GMT
கும்பமேளாவில் கடைசி புனித நீராடல் நடந்தது. பிரதமர் வேண்டுகோளை ஏற்று வெறும் சம்பிரதாயத்துக்கு நடந்தது.

கொரோனா பாதிப்பு
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கொரோனா தாக்கம் காரணமாக, இதன் நாட்கள் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. அதன்படி, வருகிற 30-ந்தேதி முடிவடைகிறது.கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்து புனித நீராடினர். பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர்.இது, கொரோனா பரவலுக்கு வழிவகுத்தது. புனித நீராட வந்த பக்தர்கள் மற்றும் மடாதிபதிகள் நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் 
பாதிக்கப்பட்டனர். 2 மடாதிபதிகள் உயிரிழந்தனர்.

கூட்டம் குறைந்தது
இதனால், கவலை அடைந்த பிரதமர் மோடி, கும்பமேளாவில் இனிவரும் நிகழ்வுகளை வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதையடுத்து, முக்கியமான பிரிவுகளை சேர்ந்த மடாதிபதிகள், கும்பமேளாவில் இருந்து விலகத்தொடங்கினர். கங்கை கரை படித்துறைகளில் பக்தர்கள் கூட்டமும் குறைந்து கொண்டே சென்றது.

30-ந்தேதி நிறைவு
இந்தநிலையில், கும்பமேளாவில் கடைசி புனித நீராடல் நேற்று நடந்தது. நேற்று மதியம்வரை, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சுமார் 700 மடாதிபதிகள் புனித நீராடினர். எந்த ஆரவாரமும் இல்லாமல் வெறும் சம்பிரதாய அளவில் புனித நீராடல் சடங்கை மேற்கொண்டனர்.மற்ற படித்துறைகளில் பக்தர்கள் கூட்டமும் மிகக்குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும், வருகிற 30-ந்தேதிதான் கும்பமேளா அதிகாரபூர்வமாக முடிவடையும். மடாதிபதிகளின் ஒத்துழைப்புக்கு கும்பமேளா அதிகாரி தீபக் ராவத் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்