வீட்டை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தி கொள்ள மல்யுத்த வீரர் அனுமதி

இந்திய மல்யுத்த வீரர் லபான்ஷூ சர்மா தனது வீட்டை கொரோனா சிகிச்சை மையமாக அரசு பயன்படுத்தி கொள்ள அனுமதித்து உள்ளார்.

Update: 2021-04-27 21:29 GMT
டேராடூன்,

கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு உத்தரகாண்டில் டேராடூன் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 26ந்தேதி இரவு 7 மணி முதல் வருகிற மே 3ந்தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த வீரர் லபான்ஷூ சர்மா தனது வீட்டை கொரோனா சிகிச்சை மையமாக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என கூறி முன்வந்துள்ளார்.  உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் உள்ள இவரது இல்லத்தின் தரை தளம் மற்றும் முதல் தளம் கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக செயல்படும்.

இந்த வீட்டின் 2வது தளத்தில் லபான்ஷூ மற்றும் அவரது பெற்றோர் வசிக்க இருக்கின்றனர்.  நோயாளிகளுக்கு வேண்டிய உணவு மற்றும் அவர்களது உடைகளை சலவை செய்தல் ஆகிய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என லபான்ஷூ கூறியுள்ளார்.

இதுபற்றி முதல் மந்திரி தீரத் சிங் ராவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.  வீட்டில் 25 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

உலக அமைதி பயணத்தின் ஒரு பகுதியாக லபான்ஷூ, தனது சகோதரர் விஷாலுடன் இணைந்து இந்தியாவில் இருந்து லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.  இந்த பயணம் கடந்த ஆண்டு நிறைவடைந்தது.  இதில் சர்வதேச சாலைகள் வழியே அவர் 32 நாடுகளை கடந்து சென்றுள்ளார்.

மேலும் செய்திகள்